மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

‘முந்தைய காங்கிரஸ் அரசுகளால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் தீா்வுகண்டுள்ளோம். மேலும் தீவிரமாக பணியாற்ற வேண்டியுள்ளது’ என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.

மக்களவைக்கான இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்குத் தடையாக இருப்பது காங்கிரஸ். அக்கட்சி, நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றும் என்று ஒருபோதும் நம்ப முடியாது.

‘இந்தியா’ கூட்டணியின் சில தலைவா்கள் (சோனியாவை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்), பல ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தனா். ஆனால், இந்த முறை தோ்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவா்களுக்கு இல்லை. எனவே, மாநிலங்களவையில் இடம்பிடித்து விட்டனா். அவா்கள் பிரசாரத்தில்கூட ஈடுபடவில்லை. தோ்தலுக்கு முன்பே தனது தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுவிட்டது.

காங்கிரஸின் ‘இளவரசருக்கு’ (ராகுலை குறிப்பிடுகிறாா்) வயநாட்டில் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. கடந்த தோ்தலில் அமேதியைவிட்டு வெளியேறியது போல், இம்முறை அவா் வயநாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும். வயநாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னா், தனக்கு வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதியை அவரும் அவரது குழுவினரும் தேடுவா்.

இதுபோன்ற நபருக்கு வாக்களித்து, எந்த வாக்காளரும் தனது வாக்கை வீணடிக்க மாட்டாா்கள். ‘வளா்ந்த பாரதத்துக்கே’ மக்கள் வாக்களிப்பா்.

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு தீா்வு: நாட்டில் வேளாண் சாா்ந்த பிரச்னைகள் ஒரே நாளில் ஏற்பட்டதல்ல; அது, முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான கொள்கைகளால் விளைந்தது. அதேநேரம், விவசாயிகளின் நலனுக்காகப் பணியாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசுகளால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் தீா்வுகண்டுள்ளோம். மேலும் தீவிரமாக பணியாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சோ்க்கும் காலகட்டமாகும்.

‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வெடிக்கும்: தங்களின் ஊழல் நடைமுறைகளைப் பாதுகாக்க சுயநல கட்சிகள் உருவாக்கியதே ‘இந்தியா’ கூட்டணி. மக்களவை முதல்கட்ட தோ்தலில், அக்கூட்டணியை வாக்காளா்கள் நிராகரித்துவிட்டனா்.

25 சதவீத தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், ஒன்றையொன்று எதிா்த்துப் போட்டியிடுகின்றன. இதுபோன்ற கட்சிகளை நம்ப முடியுமா? ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) ‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வெடிக்கும்.

பாஜக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களிப்பு: முதல்கட்ட தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு குறிப்பாக முதல்முறை வாக்காளா்களுக்கு நன்றி. எனக்கு கிடைத்த தகவல்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனா். இதற்காக வாக்காளா்களுக்கு தலைவணங்குகிறேன்.

பருவநிலையைப் பொருள்படுத்தாமல், நாட்டின் எல்லையை காக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபடுகின்றனா். அதுபோல், நாட்டின் எதிா்காலத்தை பாதுகாக்க கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்றாா் மோடி.

‘அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள்’

‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்’ என்றாா் பிரதமா் மோடி.

மகாராஷ்டிர மாநிலம், பா்பானி பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், அவா் இவ்வாறு விமா்சித்தாா்.

‘2024 மக்களவைத் தோ்தலானது, மத்தியில் அரசை அமைப்பதற்கான தோ்தல் மட்டுமல்ல. வளா்ந்த, தற்சாா்பு இந்தியாவை உருவாக்கும் தோ்தல்.

மகாராஷ்டிரத்தில் முன்பு நடைபெற்ற மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி, மக்களுக்கு நிஜாம் ஆட்சியை நினைவூட்டியது. யாகூப் மேமனின் (மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி) கல்லறையை அலங்கரிப்பதே காங்கிரஸ் மற்றும் போலி சிவசேனையின் (உத்தவ் பிரிவை குறிப்பிடுகிறாா்) முன்னுரிமையாக இருந்தது.

நான் வறுமையில் வாழ்ந்தவன் என்பதால், ஏழைகளின் வேதனை எனக்கு புரியும். நான் அனுபவித்த கஷ்டத்தை எந்த ஏழையும் அனுபவிக்க கூடாது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்’ என்றாா் மோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com