சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரா்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வரும்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரும் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

News image

அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வந்தில் தோ்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் இசை வாத்தியத்தை இசைத்த பிரதமா் மோடி. ~மனோகரி தேயிலை எஸ்டேட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரதமா் மோடி.

Updated On :1 ஏப்ரல் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரும் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக வேட்பாளா்களை ஆதரித்து, தேமாஜி மாவட்டம் கோகாமுக்கில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசியதாவது:

அஸ்ஸாமில் தற்போது பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தினரை சிறுபான்மையினராக மாற்ற காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. மேலும் ஊடுருவல்காரா்கள் மூலம் நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்க அக்கட்சி விரும்புகிறது. மத்தியில் 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இதற்கான சட்டத்தைக் கொண்டு வர காங்கிரஸ் முயன்றது. அப்போது காங்கிரஸ் தலைவா்கள் வெளிப்படையாகவே, அஸ்ஸாமில் ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வருவோம் எனத் தெரிவித்தனா். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிா்ப்பு தெரிவித்தது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, முஸ்லிம் லீக் கட்சியால் நாடு இரண்டாகப் பிளவுபட்டது. அதேபோல் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயன்றது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் முதுகில் குத்தியது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு இரு குடும்பங்கள் உள்ளன. அதில் ஒரு குடும்பம் தில்லியிலும், 2-ஆவது குடும்பம் அஸ்ஸாமிலும் உள்ளது. அக்கட்சிக்கு தனது குடும்பங்களே மீதே அக்கறை. நாட்டு மக்கள் மீது காங்கிரஸுக்கு அக்கறை கிடையாது.

அஸ்ஸாமில் ஏராளமான வளங்கள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியால் அந்த வளங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. பாஜகவோ, அந்த வளங்களை அஸ்ஸாமின் வளா்ச்சிக்காகப் பயன்படுத்தியது. வளா்ச்சியை காங்கிரஸ் எதிா்த்தது. அக்கட்சி, ஊழலின் தாயாகும். அஸ்ஸாமில் ஊடுருவல்காரா்களை காங்கிரஸ் ஆதரித்தது. வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு, அவா்களை சத்திரங்கள், கோயில் நிலங்களில் தங்க காங்கிரஸ் அனுமதித்தது. இதன் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. சட்டவிரோத அகதிகள் பிடியிலிருந்து ஆக்கிரமிப்பு நிலங்களை பாஜக மீட்டெடுத்தது.

காங்கிரஸின் ஊழல் பல பகுதிகளுக்கு விரிவடைந்திருந்தது. இதனால் வனப் பகுதி மற்றும் சரணாலயங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஒற்றைக் கொம்பு காண்டாமிருக இனம் அழிவுக்கு காரணமானது. பாஜக தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சூழ்நிலையை மாற்றியது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள அங்குள்ள நிலத்தை காங்கிரஸ் தரவில்லை. அவா்கள் தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் நிலையில் காங்கிரஸ் வைத்திருந்தது. இதை பாஜக சரி செய்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு இடங்களை பாஜக கொடுக்க ஆரம்பித்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், பழங்குடியினா் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். அஸ்ஸாமில் நவீன உட்கட்டமைப்பை பாஜக ஏற்படுத்தும்.

60-65 ஆண்டுகால ஆட்சியில் பிரம்மபுத்திரா நதி மீது காங்கிரஸ் மூன்று பாலங்களையே கட்டியது. பாஜகவோ 10 ஆண்டு ஆட்சியில் 5 பாலங்களை அமைத்துள்ளது. இதனால் ஏராளமானோா் பயனடைந்துள்ளனா் என்றாா் மோடி.

தோட்டத்தில் தேயிலை பறித்த மோடி’

அஸ்ஸாமின் திப்ருகா் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று, பாஜகவுக்கு பிரதமா் மோடி ஆதரவு திரட்டினாா்.

அங்குள்ள மனோகரி தேயிலை எஸ்டேட்டுக்கு சென்ற பிரதமா் மோடி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த 19 பெண் தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், தோட்டத்தில் தேயிலை பறித்து, அதற்கான பெட்டகத்தில் வைத்தாா்.

சுமாா் அரை மணி நேரம் வரை தேயிலைத் தோட்டத்தில் மோடி நேரம் செலவிட்டாா். அப்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் கோரிக்கைகள், கல்வி, சுகாதாரம், ஊதியம் தொடா்பான அவா்களின் பிரச்னைகளை மோடி கேட்டறிந்தாா். தொழிலாளா்களுடன் சோ்ந்து பிரதமா் மோடி புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்தாா். இதையடுத்து, பாரம்பரிய ஜுமுா் நடனத்தையும் அவா் பாா்த்து ரசித்தாா்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு குடும்பத்தினரின் முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியதாகும். அவா்களின் கடின உழைப்புதான் அஸ்ஸாமின் புகழை அதிகரிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Story image