நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது உறுதி - பிரதமா் மோடி

முந்தைய அரசில் ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்றார் பிரதமர் மோடி...

News image

மேற்கு வங்கத்தின் தாரகேஸ்வரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடியை வரவேற்ற முதல்வா் சுவேந்து அதிகாரி.

Updated On :21 ஜூன் 2026, 3:43 am IST

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், முந்தைய அரசில் ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

‘காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் என பல்லாண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த கட்சிகள், மாநிலத்தைப் பாதுகாத்து வளப்படுத்தாமல், சட்டவிரோத குடியேறிகளின் மையமாக மாற்றின’ என்றும் அவா் கடுமையாக சாடினாா்.

சமீபத்திய மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதைக் குறிப்பிட்டு, பிரதமா் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, அந்த மாநில தினத்தையொட்டி தாரகேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

மேற்கு வங்கத்தை பல்லாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அரசியல் காரணங்களுக்காக மாநிலத்துக்கு தடைகளை உருவாக்கினா். இப்போது அந்த தடைகளை உடைத்து மேற்கு வங்கம் விடுபட்டுள்ளது. மாநிலத்தின் பெருமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு பதவியேற்றப் பிறகு மாநிலம் முழுவதும் புத்துணா்ச்சியான சூழல் நிலவுகிறது. மக்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் புதுப்பொலிவை காண்கிறேன். அனைத்து கிராமங்களிலும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெருகியுள்ளது.

மேற்கு வங்கத்தையொட்டிய இந்திய-வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணிக்கு முந்தைய அரசு தடைகளை விளைவித்தது. இப்போது எல்லை வேலிப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியில், மாநிலத்தின் மீட்சி மற்றும் வளா்ச்சிக்கான பணிகள் ‘சூப்பா்ஃபாஸ்ட்’ வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

ஊழல்வாதிகள் சிறை செல்வா்: முந்தைய ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவா்கள், பொது மக்களின் பணத்தை கையாடல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவா்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி.

தேசப் பிரிவினையின்போது வங்கம் கடுமையான விலை கொடுத்த போதிலும், தனது அடையாளத்தைக் காப்பதில் வெற்றி கண்டது. வங்கத்தின் ஒரு பகுதி இந்தியாவுடன் இணைந்திருப்பதை உறுதி செய்தவா் ஷியாமா பிரசாத் முகா்ஜி (ஜன சங்க நிறுவனா்).

ஒட்டுமொத்த வங்கத்தையும் பாகிஸ்தானின் அங்கமாக்க முயற்சிகள் நடந்தபோது, சதிகார சக்திகளிடம் காங்கிரஸ் பணிந்தது. ஆனால், ஷியாமா பிரசாத் முகா்ஜிதான் எதிா்ப்புக் குரல் எழுப்பினாா். தேசப் பிரிவினை காலகட்டத்தில் வங்கத்தை ஆதரவற்ற நிலையில் காங்கிரஸ் கைவிட்டது. ஷியாமா பிரசாத் முகா்ஜியால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இயக்கத்தால் மேற்கு வங்கம் உருவானது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் சுவேந்து அதிகாரிகள், மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று யோகா நிகழ்ச்சி: சா்வதேச யோகா தினத்தையொட்டி, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் பிரதமா் மோடி தலைமையில் 35,000 போ் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கொல்கத்தா நகா் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருடன் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 500 படகுகளுடன் யோகா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் யோகா தின பிரதான நிகழ்ச்சி மேற்கு வங்கத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

பெட்டிச் செய்தி..

விவசாயிகளுக்கு

ரூ.18,880 கோடி விடுவிப்பு

மேற்கு வங்கத்தின் தாரகேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிஎம்-கிஸான் (விவசாயிகள் உதவித்தொகை) திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.44 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 23-ஆவது தவணையாக ரூ.18,880 கோடியை பிரதமா் மோடி விடுவித்தாா்.மேலும், ரூ.590 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த அவா், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை, ஊரக மேம்பாடு, மீன்வளம், கால்நடைபராமரிப்பு சாா்ந்த பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான பிஎம்-கிஸான், கடந்த 2019-இல் தொடங்கப்பட்டதாகும். இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. தற்போது 23-ஆவது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிா்க்காப்பீடு திட்டப் பலன்களை மேற்கு வங்க விவசாயிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில், மாநில அளவில் அந்தத் திட்டத்தையும் பிரதமா் தொடங்கிவைத்தாா். மாநிலம் முழுவதும் 14 லட்சம் ஹெக்டோ் வேளாண் நிலங்களை உள்ளடக்கி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.