நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!
புவனேஸ்வரம்: வெயில் கொளுத்துகிறதே, அனல் பறக்கிறதே, வெக்கை தாங்க முடியவில்லையே என நாம் எவ்வளவு கலங்கினாலும்.. நாட்டிலேயே அதிக அனல் கொளுத்தும் நகரத்தின் பட்டியலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்தான் உள்ளது. அதனுடன் ஆந்திரத்தின் கடப்பாவும் சேர்ந்துகொண்டுள்ளது.
மூன்றாவது இடத்தில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. இங்கு அதிகபட்ச வெப்ப அளவாக 110 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. இது வழக்கமான வெப்ப அளவை விட 5.2 டிகிரி அதிகமாகும்.
நாட்டிலேயே, இந்த கோடைக்காலத்தில் அதிகம் வெப்பம் பதிவான நகரங்களில் புவனேஸ்வரமும், கடப்பாவும் ஒன்றாக உள்ளன. இவ்விரண்டு நகரங்களிலும் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
இங்கெல்லாம் காலையிலேயே வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிடுமாம். 8.30 மணிக்கு இங்கு கிட்டத்தட்ட 94 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிடுகிறது. 11.30 மணிக்கெல்லாம் 100 டிகிரியை நெருங்கிவிடும். கோடை வெப்பம் உச்சம் தொடும்போது 110 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டுகிறதாம். இந்த நேரத்தில், பயங்கர அனல் பறக்குமாம். இதனால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிடுகிறது. இங்கு இந்த மாதத்தில் மட்டும் 10 நாள்கள் வெப்ப அலை வீசியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே ஏப்ரலில் 5 நாள்கள் தான் வெப்பஅலை வீசியது.
ஒடிசாவில் திங்களன்று 89 பேர் வெப்பம் அதிகரித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர், கரூர், திருச்சி, திருத்தணி, சேலம், தருமபுரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்ப அளவானது 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டிவிட்டது. இன்னமும் சென்னையில் 100 - 102 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலேயே வெப்பம் நிலவுகிறது. இது இயல்பு அளவைக் காட்டிலும் 2-2.7 டிகிரி வெப்பம் அதிகமாகும்.
வரும் வியாழனன்று ஒடிசாவின் சில பகுதிகளில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சில இடங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

