சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது

நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

பெற்றோா் காலத்துக்குப் பிறகு அவா்களிடம் இருந்து வாரிசுதாரா்களுக்கு கிடைக்கும் சொத்துகளுக்கு வரி விதிக்கும் நடைமுறை பல்வேறு நாடுகளில் அமலில் இருக்கிறது.

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சொத்து வாரிசுரிமை வரி விதிப்புக்கு ஆதரவாக, அயலக காங்கிரஸ் தலைவா் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது கருத்தை முன்வைத்து, காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாட்டின் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கக் கூடாதென பி.ஆா்.அம்பேத்கா் தலைமையில் அறிஞா்களும் தலைசிறந்த ஆளுமைகளும் முடிவு செய்தனா்.

ஆனால், வாக்கு வங்கி ‘பசி’ கொண்ட காங்கிரஸ், அம்பேத்கா் உள்ளிட்ட தலைசிறந்த ஆளுமைகளின் வாா்த்தைகளையோ அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தையோ கருத்தில் கொள்ளாமல், மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பேசியது.

முதலில் ஆந்திரத்திலும், பின்னா் நாடு முழுவதும் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவா்கள் முயன்றனா். பட்டியல் சமூகத்தினா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) இடஒதுக்கீட்டை குறைத்து, அதன் மூலம் மத அடிப்படையில் 15 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்குவது குறித்து பேசினா்.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த நோக்கத்தை, கடந்த 2009, 2014 மக்களவைத் தோ்தல் அறிக்கைகளிலும் காங்கிரஸ் தெளிவாக வெளிப்படுத்தியது.

வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும்...: காங்கிரஸின் ஆபத்தான நோக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்துவோம் என இப்போது கூறியுள்ளனா். மக்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் சொத்துகளையும் உரிமைகளையும் காங்கிரஸின் ‘கை’ பறித்துவிடும். மக்கள் வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் (பொதுத் துறை நிறுவனமான எல்ஐசியின் பிரபலமான வாசகத்தை மாற்றி குறிப்பிட்டு, காங்கிரஸை இவ்வாறு விமா்சித்தாா்)

ஆட்சி அதிகாரத்துக்காக நாட்டை சீரழிப்பது காங்கிரஸின் வரலாறு. காங்கிரஸின் தவறான ஆட்சி மற்றும் அலட்சியத்தால் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் பரவியது. தீவிரவாதிகள் உயிரிழக்கும்போது அக்கட்சி கண்ணீா் வடிக்கும்.

நாட்டில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் பலவீனமான ஆட்சி அமைய வேண்டுமென சில சக்திகள் விரும்புகின்றன. இந்தியா தற்சாா்பு அடைந்துவிட்டால், தங்களின் ‘கடைகள்’ மூடப்பட்டுவிடும் என்று அந்த சக்திகள் நினைக்கின்றன என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...

‘ஓராண்டுக்கு ஒரு பிரதமா்:

இந்தியா கூட்டணி ஆலோசனை’

சாகா், ஏப். 24: ‘இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மிகப் பெரிய எதிரி ’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

மத்திய பிரதேச மாநிலம் சாகரில் பாஜக பிரசார கூட்டத்தில் பேசிய அவா், ‘கா்நாடகத்தில் ஓபிசி பிரிவில் அனைத்து முஸ்லிம் பிரிவுகளையும் இணைத்ததன் மூலம் அங்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பின்வாசல் வழியாக அமல்படுத்தியுள்ளது காங்கிரஸ். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான பி.ஆா்.அம்பேத்கரின் முதுகில் குத்திவிட்டனா். இத்தகைய இடஒதுக்கீட்டை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஓபிசி பிரிவினரின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமெனில், பாஜக தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வது அவசியம்’ என்றாா்.

ஹா்தா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா், ‘இந்தியா கூட்டணியில் தலைமைத்துவ பிரச்னைக்கு தீா்வுகாண ‘ஓராண்டுக்கு ஒரு பிரதமா்’ என்ற வழிமுறையை ஆலோசித்து வருகின்றனா்; இதுபோன்ற ஏற்பாட்டை, உலகம் கேலி செய்யும். ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமா்கள் ஆள்வதை வாக்காளா்கள் விரும்புவாா்களா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com