காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

”நாட்டில் தலிபான்களின் நடவடிக்கைகளை செயல்படுத்தி பெண்களுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடவும் காங்கிரஸ் தயங்காது.”
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
படம் | பிடிஐ

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கு பதிலடியாக, ’சாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் பறிக்கப்படும்’ என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியின சமூகத்தினரின் (எஸ்டி) இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தலித் பிரிவைச் சார்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களின் உரிமை பறிபோகும் என யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப். 24) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “காங்கிரஸும், ’இந்தியா’ கூட்டணியும் நாட்டின் சமூக கட்டமைப்பை நார்நாராய் கிழித்தெறிய உள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 6 சதவிகிதம் சிறுபான்மை சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடு உரிமைகளை பறிக்கும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபடும்.

எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டுமென்பதே காங்கிரஸின் நோக்கம்.இதற்காக எந்த நிலைக்கும் காங்கிரஸ் செல்லும். நாட்டில் தலிபான்களின் நடவடிக்கைகளை செயல்படுத்தி பெண்களுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடவும் தயங்கமாட்டார்கள். ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தையும் அமல்படுத்த காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல.

1947இல் இந்திய தேசம் பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை போன்றே இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன்காரணமாக, பயங்கரவாதமும், தீவிரவாதமும், பிரிவினைவாதமும் நாட்டில் பரவியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கு தான் முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக்காலத்தின்போது கூறியிருந்தார் என்பதை கடந்த சில நாள்களுக்கு முன்பு, பிரதமர் மோடி மேற்கோள்காட்டிப் பேசியிருந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை யோகி ஆதித்யநாத்தும் பேசியுள்ளார்.

சச்சார் ஆணையத்தால் தலித் பிரிவைச் சார்ந்தவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில், வலுக்கட்டாயமாக மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களையும் ஒரு பகுதியாக இணைத்திட காங்கிரஸ் ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com