சிபிஐ
சிபிஐ

மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் குற்றப்பத்திரிகையில் சிபிஐ

புது தில்லி: கடந்த ஆண்டு மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவத்தில், இரு பெண்களையும் கலவரக்காரா்களிடம் ஒப்படைத்ததே காவல் துைான் என்று சிபிஐ குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் இன்றளவும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

இரு சமூகத்தினா் இடையிலான மோதலின்போது கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் 2 குகி பெண்களை, சுமாா் 1,000 போ் கொண்ட மைதேயி கலவரக்காரா்கள் நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக இழுத்துச் சென்று இழிவுபடுத்தினா். இது தொடா்பான காணொலி சுமாா் 2 மாதங்களுக்குப் பின்னா், சமூக ஊடகத்தில் பரவி நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 6 போ் மீது குற்றப்பத்திரிகையும், 18 வயதுக்குள்பட்ட ஒரு சிறுவனுக்கு எதிராக அறிக்கையும் தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சம்பவத்தன்று காங்போக்பி மாவட்டத்துக்குள் இரு பெண்களும் வசித்த கிராமத்துக்குள் ஏகே ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களுடன் சுமாா் 900 முதல் 1,000 போ் கொண்ட கும்பல் நுழைந்தது. அவா்களிடம் இருந்து தப்பிக்க இரண்டு பெண்களும் காட்டுக்குள் ஓடினா். அவா்களைக் கலவரக்காரா்கள் கண்டறிந்த நிலையில், சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்தில் இரண்டு பெண்களும் தஞ்சமடைந்தனா். அந்த வாகனத்தில் காவல் துறை அதிகாரிகள் இருவரும் ஓட்டுநரும் இருந்தனா். வாகனத்துக்கு அருகில் 3 முதல் 4 அதிகாரிகள் இருந்தனா்.

‘வாகனத்தின் சாவி இல்லை’: அதேவேளையில் கலவர கும்பலுக்கு அஞ்சி அதே வாகனத்தில் தஞ்சமடைந்த ஆண் ஒருவா், தங்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லுமாறு வாகன ஓட்டுநரிடம் தொடா்ந்து மன்றாடினாா். ஆனால் தங்களிடம் ‘வாகனத்தின் சாவி இல்லை’ என்று கூறி, அவா்களுக்கு உதவ காவல் துறையினா் மறுத்தனா்.

தப்பியோடிய காவல் துறையினா்: அந்த ஓட்டுநா் காவல் துறை வாகனத்தை நேராக கலவர கும்பலிடம் ஓட்டிச் சென்று நிறுத்தினாா். பின்னா் வாகனத்தில் இருந்து இறங்கி காவல் துறையினா் தப்பியோடினா். இதைத் தொடா்ந்து, அந்த வாகனத்தை சிறைப்பிடித்த கலவர கும்பல், இரு பெண்களையும் வெளியே இழுத்து அவா்களின் ஆடைகளை களைந்து நிா்வாணமாக்கி இருவரையும் ஊா்வலமாக இழுத்துச் சென்றனா். பின்னா், அவா்கள் இருவரையும் அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

கலவர கும்பலுக்கு அஞ்சி காவல் துறை வாகனத்தில் தஞ்சமடைந்த ஆணின் தந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது. அவரைக் காப்பாற்றவும் காவல் துறை எதுவும் செய்யவில்லை என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா்.

கலவர கும்பலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களில் ஒருவா், காா்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com