ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது நடைபெற்ற இந்த கட்சித் தாவல் அந்த மாநில தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட அக்ஷய் காந்தி பாம், தனது வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றார். பாஜக தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், காங்கிரஸூக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சியோபூரில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டத்துக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத் (64), முதல்வர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொரினா நகரின் மேயர் சாரதா சோலங்கியும் அவருடன் பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா, முன்னாள் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் பாஜகவுக்கு அவர்களை வரவேற்றுப் பேசினர்.

இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றபோது சியோபூருக்கு அடுத்து அமைந்துள்ள பிண்டி பகுதியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

விஜய்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அவரது அமைச்சரவையில் (1993-2003) காலகட்டத்தில்) ராம்நிவாஸ் ராவத் இடம்பெற்றிருந்தார்.

கடந்த டிசம்பரில் ஜீது பட்வாரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து மத்திய பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராம்நிவாஸ் ராவத் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com