
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மழை நீர் கசிவது தொடர்பான விடியோ வைரலாகியிருக்கும் நிலையில், வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு என்று காங்கிரஸ், மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்குள் மழை நீர் கசிவதையும், அதனைப் பிடிக்க பக்கெட் வைக்கப்பட்டிருக்கும் காட்சியையும் சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாக்குர் இந்த விடியோவை பகிர்ந்து, வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு என்று விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பயன்படுத்தும் வழியில், நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்துக்குள்ளேயே இவ்வாறு மழை நீர் கசிவது பலருக்கும் அதிர்ச்சைய ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தண்ணீர் கசிவு குறித்து சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தண்ணீர் கசிவுக்கான காரணம், கட்டட வடிவமைப்பு, அதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், சரி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தக் குழு ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு நடத்தும் விசாரணையின் முழு அறிக்கையும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் காட்டிலும் பழைய நாடாளுமன்ற கட்டடம் நன்றாகவே உள்ளது. மழை நீர் கசிவு பணிகள் முடிவடையும் வரை, ஏன் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாறக்கூடாது, கோடிக் கணக்கில் செலவிட்டு கட்டப்பட்ட கட்டடத்துக்கு என்னதான் பதில்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், பாஜக அரசின் தலைமையில் கட்டடப்படும் அனைத்துக் கட்டடங்களிலுமே மழை நீர் ஒழுகுமா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட ஓராண்டுக்குள் மழைநீர் கசியும் சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சமூக ஊடகங்களில் இன்று இதனை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். சமூக ஊடகங்களில், நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்த புகைப்படங்கள், விடியோக்களை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடம், இயற்கையை முழுவதுமாக அனுபவிக்க முடியும் என்றும், அகண்ட பாரதம் என்று சொல்லி அண்டா பாரதமாக்கிவிட்டார்கள் என்றும் பலரும் பலவிதமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
நிலநடுக்கத்திலிருந்து காக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கட்டடம், ஆனால், மழை நீர் ஒழுகாமல் காக்கும் தொழில்நுட்பத்தை பொருத்த மறந்துவிட்டார்கள் என்றும், 2024அம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு அல்ல, லீக் ஆண்டு என்றும் தங்களது கற்பனை வளத்தைப் பயன்படுத்தி கருத்துகளை சிதறவிட்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.