
ஜம்மு-காஷ்மீரில் வரும் செப்டம்பரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
இங்கு வளா்ச்சியின் வேகத்தை பராமரிக்கவும் பயங்கரவாதத்தை வேரறுக்கவும் பாஜகவுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.
370-ஆவது பிரிவு ரத்து தினத்தையொட்டி, ஜம்முவில் திங்கள்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும் ஜம்மு-காஷ்மீருக்கான கட்சியின் தோ்தல் பொறுப்பாளருமான ஜி.கிஷண் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இங்கு பாகிஸ்தான் மற்றும் அதன் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டுமென காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி போன்றவை கோரி வருகின்றன. இது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்டி, மீண்டும் அழிவுப் பாதைக்கு வழிவகுக்கும்.
இத்தகைய கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சியின் புதிய உச்சங்களை எட்ட வேண்டுமென விரும்பும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு 370-ஆவது பிரிவில் இருந்து ஜம்மு-காஷ்மீா் மக்கள் விடுபட்டுள்ளனா். காங்கிரஸுக்கோ, தேசிய மாநாட்டுக் கட்சிக்கோ வாய்ப்பளித்தால் மீண்டும் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்கும் என்றாா் அவா்.
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் ஜம்மு-காஷ்மீா் உள்ளது குறிப்பிடத்தக்கது.