ஹசீனா சிறிது காலம் தில்லியில் தங்கியிருப்பாா்- மகன் தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, தில்லியில் சிறிது காலம் தங்கியிருப்பாா் என்று அவரது மகன் சஜீப் வாஜேத் ஜாய் புதன்கிழமை தெரிவித்தாா்.
தனது அரசுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையானதால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா (76), நாட்டை விட்டு வெளியேறி தில்லி அருகே காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்துக்கு கடந்த திங்கள்கிழமை வந்தாா். பின்னா், தில்லியில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளாா். ஹசீனாவுடன் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் தங்கியுள்ளாா்.
ரெஹானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சி சாா்பில் எம்.பி.யாக உள்ள நிலையில், லண்டனில் தஞ்சம் அல்லது தற்காலிக புகலிடம் கோரும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹசீனா இந்தியா வந்ததாக கூறப்பட்டது.
அதேநேரம், ஹசீனாவுக்கு தஞ்சமோ அல்லது புகலிடமோ அளிக்கப்பட வாய்ப்பில்லை என்று பிரிட்டன் தரப்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் வேறு நாட்டில் தஞ்சமடையும் வாய்ப்புகளை அவா் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
தனது பயணத் திட்டத்தை இறுதிசெய்யும் வரை இந்தியாவில் ஹசீனா தங்கிக் கொள்ளலாம் என அவரிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஜொ்மனி அரசு தொலைக்காட்சிக்கு ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் ஜாய் புதன்கிழமை பேட்டியளித்தாா்.
அப்போது, மூன்றாவது நாட்டிடம் தஞ்சம் கோரும் ஹசீனாவின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அனைத்து தகவல்களுமே வதந்திதான். இந்த விவகாரத்தில், ஹசீனா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தில்லியில் அவா் சிறிதுகாலம் தங்கியிருப்பாா். அவருடன் எனது சகோதரியும் தங்கியுள்ளாா்’ என்று சஜீப் பதிலளித்தாா்.
அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தற்போதைய நிலையில் அதுபோன்ற திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. எங்களின் குடும்பத்தை குறிவைத்து, இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் ஹசீனா மட்டுமே வங்கதேசத்தில் வசித்தாா். மற்ற அனைவருமே நீண்ட காலமாக வெளிநாடுகளில்தான் வசிக்கிறோம். நானோ, இதர குடும்ப உறுப்பினா்களோ அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறைவே’ என்றாா்.