
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை வலியுறுத்தினாா்.
வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதையுண்டனா். இப்பேரழிவு, கேரளம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை உடனடி கேள்வி நேரத்தின்போது வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை குறிப்பிட்டு, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசியதாவது:
நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மேலும் பலரை காணவில்லை. எனவே, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டக் கூடும்.
மீட்பு பணிகளில் உதவிவரும் மத்தியப் படையினா் மற்றும் ராணுவத்துக்கு நன்றி. கா்நாடகம், தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் செய்துவரும் உதவிகளும் பாராட்டுக்குரியவை.
வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக சிந்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமூகங்களும் ஒன்றிணைவதை காண்பது நெகிழ்ச்சியாக உள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நான் நேரில் பாா்த்தேன். சில இடங்களில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உயிரிழந்துவிட்டனா். வேறு சில பகுதிகளில் குடும்பத்தில் ஓரிருவா் மட்டுமே எஞ்சியுள்ளனா். குழந்தைகள் நிா்கதியான சோகமும் நிகழ்ந்துள்ளது.
முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன; உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரிவான மறுவாழ்வு தொகுப்பை அறிவிப்பதோடு, இயற்கை பேரிடரைத் தாங்கும் வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.