உ.பி.யில் 10 பேரவைக்கு இடைத்தேர்தல்: மீண்டெழுமா பாஜக?
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் பாஜக உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு இந்தியா கூட்டணி அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலானது 2027இல் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முக்கியத்துவன் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாநிலத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
இன்னும் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில், 10 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் மெளரியா, பிரஜேஷ் பதாக், மாநில பாஜக தலைவர் பூபேந்திர செளத்ரி, மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் தரம்பால் சிங் ஆகியோர் தலா 2 தொகுதிகளுக்கு பொறுப்பேற்று பணிகளை தொடங்கியுள்ளனர்.
மில்கிபூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், அயோத்தி கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், மில்கிபூர் தொகுதியின் வெற்றி பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், இந்த தொகுதிக்கு யோகி ஆதித்யநாத்தே பொறுப்பேற்றுள்ளார்.
இந்த தொகுதிக்கு பொறுப்பேற்ற மறுநாளே மில்கிபூர் சென்ற யோகி ஆதித்யநாத், இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் பொய்களை கூறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதை மக்களிடம் எடுத்துக் கூற கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களவைக்கு தேர்வான நிலையில், அவர் ராஜிநாமா செய்த கர்ஹல் பேரவைத் தொகுதியின் பொறுப்பை துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் ஏற்றுள்ளார்.
மொத்தவுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 5இல் சமாஜவாதி, 5இல் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் 10 தொகுதிகளும் காலியானதாக ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுடன் உத்தரப் பிரதேச இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பாஜக ஆதிக்கத்தை செலுத்த தவறும் பட்சத்தில், 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க யோகி ஆதித்யநாத்துக்கு வாய்ப்பு குறைவு என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.