
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற தேநீர் விருந்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களுக்கு இன்று தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த தேநீர் விருந்தில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி, எல்.முருகன், துரை வைகோ உள்ளிட்டோரும் இருந்தனர்.
தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த சில நாள்களாக மாநிலங்களவையில் தொடர் அமளி ஏற்பட்டது. நேற்று வினேஷ் போகத் விவகாரத்தில் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இன்றைய அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை, பேச முற்படும்போது மைக் அணைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி அவை வெளிநடப்பு செய்தனர்.
குறிப்பாக சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சனுக்கும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் கருத்து மோதல் இருந்தது. இதையடுத்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவை முடியும் நேரத்தில் பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தார். பின்னர் மக்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை நடைபெறவிருந்த நிலையில் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.