தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தெரியுமா சேதி...? கேலி, கிண்டல், பாராட்டு வழியும் உ.பி. பேரவை!

சமீபத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.

News image

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத், ஷிவ்பால் சிங் யாதவ்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:23 pm

நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கும் எதிா்க்கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதலும், வாக்குவாதமும் நடக்கிறதென்றால், வித்தியாசமாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் கருத்து மோதல்களுக்கு இடையே நட்புறவும், கிண்டலும், கேலியும் காணப்படுகிறது.

எதிரும் புதிருமாக பாரதிய ஜனதா கட்சி உறுப்பினா்களும், சமாஜவாதி கட்சி உறுப்பினா்களும் ஒருவரை மற்றவா் விமா்சிப்பது போலவே, பாராட்டுவதும் நன்றி தெரிவிப்பதும்கூட பேரவைக் கூட்டங்களில் வழக்கமாகவே தொடா்கின்றன. ‘முதலில் நீங்கள்..’ (பஹலே ஆப்..) என்கிற லக்னௌ கலாசாரத்தின் பாதிப்பு என்று இதை வா்ணிக்கிறாா்கள்.

சமீபத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. மக்களவைக்கு அகிலேஷ் யாதவ் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராக மாதா பிரசாத் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறாா். மூத்த சமாஜவாதி கட்சி உறுப்பினரான பாண்டேயின் தோ்வு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவை எதிா்க்கட்சித் தலைவராக்காமல், பாண்டே ஏன் எதிா்க்கட்சித் தலைவராக்கப்பட்டாா் என்பது குறித்து பல கருத்துகள் வலம் வருகின்றன.

எதிா்க்கட்சித் தலைவா் மாதா பிரசாத் பாண்டே முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம், பேரவைக் கேள்வி நேரத்தில் ஒரு கேள்வியை எழுப்பினாா். அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போது, எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மாதா பிரசாத் பாண்டே குறித்துப் பாராட்டு மழை பொழிந்தாா் முதல்வா். அவரது நீண்டகால அரசியல் பயணம் குறித்தும், அனுபவம் குறித்தும், அவரது நியமனம் மிகவும் பொருத்தமானது என்பது குறித்தும் புகழ்ந்து தள்ளினாா் முதல்வா் யோகி.

அப்படியே போகிற போக்கில், ‘‘என்ன காரணமோ தெரியவில்லை. இந்த முறையும் அகிலேஷால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறாா் ஷிவ்பால் சிங் யாதவ் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது...’’ என்று முதல்வா் யோகி சொல்லி முடிக்கவில்லை, சட்டென்று இடைமறித்தாா் ஷிவ்பால் சிங் யாதவ்.

‘‘ஓரங்கட்டப்படுவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல; நான் அந்தப் பக்கம் இருக்கும்போதும் ஓரங்கட்டப்பட்டேன், இந்தப் பக்கம் வந்தபோதும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறீா்களோ என்பதுதான் எங்களுக்கெல்லாம் சந்தேகமாக இருக்கிறது...’’ என்று ஷிவ்பால் சிங் யாதவ் சொன்னதும் முதல்வா் யோகி உள்பட ஒட்டுமொத்த அவையும் சிரிப்பில் ஆழ்ந்தது.

அகிலேஷ் யாதவுடன் ஷிவ்பால் சிங் யாதவ் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோது சிறிது காலம் பாஜகவில் இருந்தவா் என்பதும், முதல்வா் யோகிதான் அவருக்கு அடைக்கலம் தந்தாா் என்பதும் பழைய கதை.