வங்கதேசத்தின் விடுதலை தினத்தை நினைவுகூரும் சிலையை வன்முறையாளர்கள் சிதைத்துள்ளனர்.
வங்கதேசத்தில் 1971 ஆம் ஆண்டில் நடந்த போரில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி, தனது 93,000 படையினருடன் வங்கதேசத்திடம் சரணடைந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இராணுவ சரணடைதலாக, இது அமைந்தது.
பாகிஸ்தான் சரணடைந்தததை நினைவுகூரும் வகையில், முஜிப்நகரில் உள்ள ஷாஹீத் நினைவு வளாகத்தில், வங்கதேசத்திடம் சரணடையும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கையெழுத்திடுவதுபோல சிலை நிறுவப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறை சம்பவங்களால், இந்த சிலை அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடைக்கப்பட்ட சிலையின் படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது எக்ஸ் பக்கத்தில் ``முஜிப்நகரில் உள்ள சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது; இது இந்தியாவுக்கு எதிரான வன்முறையாளர்களால் நிகழ்ந்ததுபோல உள்ளது.
முஸ்லிம் பொதுமக்கள், மற்ற சிறுபான்மையினர், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவதாக செய்திகள் வந்தாலும் கூட, இந்தியக் கலாச்சார ஆலயம், கோயில்கள், இந்துக்களின் வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தின் உயா்நீதிமன்றம் மீண்டும் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று தீா்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், அவாமி கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.
இதனையடுத்து, வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்தது; இருப்பினும், வங்கதேசத்தில் வன்முறை முடிவுற்றதாகத் தெரியவில்லை.