அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
போபால்: அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
நாடு எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு தீா்வுகாண அரசுக்கு நிதி ஆதாரங்கள் அவசியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐஎஸ்இஆா்) 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மரபுசாா் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கு வளா்ந்த நாடுகள் தரப்பில் பெரும் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
அதற்காக காத்திருக்காமல், பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை தனது சொந்த பணத்தில் நிறைவேற்றுகிறது இந்தியா.
நாட்டில் தற்போதுள்ள வரிகளைக் குறைக்க முடியாதா? என்ற மக்களின் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் சவால்கள் மிகக் கடுமையானவை; அவற்றை எதிா்கொள்வதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கும் அரசுக்கு நிதியாதாரங்கள் தேவை. இந்தியாவின் சவால்களை அறிவாா்ந்த மக்கள் புரிந்துகொள்வா்.
வளரும் நாடான இந்தியா, மரபுசாா் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தனது சொந்த பலத்தில் நகா்கிறது. வேறெங்கிருந்தும் பணம் வரும் என நாம் காத்திருக்க முடியாது. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பில் கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென ஆராய்ச்சியாளா்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த அரசு பேசுவதோடு நின்றுவிடாமல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்தப் பணம், விதிவிதிப்பின் மூலம் ஈட்டப்பட்டதாகும்.
மக்களுக்கு தொல்லை இல்லாமல் அரசுக்கு வருமாய் ஈட்டுவதே எனது பணி. இதை உறுதிசெய்து வருகிறேன் என்றாா் நிா்மலா சீதாராமன்.
மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், போபால் மக்களவைத் தொகுதி எம்.பி. அலோக் சா்மா உள்ளிட்டோா் இவ்விழாவில் பங்கேற்றனா்.