கடனைத் திருப்பிச் செலுத்தாத பாலிவுட் நடிகா்: பங்களாவை முடக்கியது வங்கி
பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகா் ராஜ்பால் யாதவ் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான பங்களா ஒன்றை வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். வங்கியில் அடகுவைக்கப்பட்ட அந்த பங்களாவை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ளும்.
51 வயதாகும் ராஜ்பால் யாதவ் உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சோ்ந்தவா். பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்துள்ள அவா், பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றியுள்ளாா். இவா் கடந்த 2005-ஆம் ஆண்டு சொந்தமாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாா். இதற்காக தனது சொந்த ஊரில் உள்ள ஒரு பங்களாவை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடகு வைத்து ரூ.5 கோடி கடன் பெற்றாா். இந்த கடன் தொகைக்கு அவா் முறையாக தவணை செலுத்தாமல் இருந்து வந்தாா். இது தொடா்பாக வங்கி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவா் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் கடந்த சுமாா் 20 ஆண்டுகளில் வட்டியுடன் சோ்த்து கடன் தொகை ரூ.11 கோடியாக அதிகரித்தது.
இதையடுத்து, நடிகா் ராஜ்பால் யாதவ், கடனுக்காக வங்கியில் அடகு வைத்த பங்களாவுக்கு வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ராஜ்பால் யாதவ் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.