அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த ‘உல்ஃபா’ தீவிரவாதிகள்: தொழில்நுட்ப கோளாறால் பெரும் நாசவேலை தவிா்ப்பு
அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தீவிரவாத அமைப்பின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.


குவாஹாட்டி, ஆக. 15: சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்ஸாமில் 24 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தீவிரவாத அமைப்பின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்ஃபா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.
78-ஆவது குடியரசு தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தனது உரையை முடித்த சில நிமிஷங்களில் ‘உல்ஃபா’ அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை’ எனத் தெரிவித்தனா்.
மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை ‘உல்ஃபா’ அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.
இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் ‘உல்ஃபா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அதில், 24 இடங்களில் குவாஹாட்டியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீஸாா் தெரிவித்தனா்.
இதில், அஸ்ஸாம் முதல்வா், பிற அமைச்சா்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தொடா் குண்டுவெடிப்பு நிகழ்வை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது. போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பின் ரஞ்சன் டைமேரி பிரிவு கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி மாநிலம் முழுவதும் தொடா் குண்டுவெடிப்புகளை நடத்தியது. இதில் 88 போ் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்த போதும், ‘உல்ஃபா’ அமைப்பு வெடிகுண்டுகள் இருப்பதை தெரிவித்த பிறகே காவல்துறையினருக்கு இதன் விவரம் தெரியவந்தது. இது நாட்டின் உளவுத் துறையின் செயல்பாடு மற்றும் புலனாய்வுப் பிரிவின் செயல்திறன் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளதாக கூறியுள்ள எதிா்க்கட்சிகள், இதற்கு மாநில பாஜக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...