
ஹரியாணாவில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனிடையே அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் நயாப் சிங் சைனி சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேர்தலுக்கு முற்றிலும் தயாராக இருக்கிறோம்.
ஹரியாணாவில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். பாஜக அரசு மாநிலத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி ஒட்டுமொத்த வளர்ச்சியை மேற்கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் அடிப்படையில் ஹரியாணா புதிய உயரங்களை எட்டியுள்ளது. காங்கிரஸின் பொய்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
ஜனநாயகத் திருவிழாவில் ஹரியாணா வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றார். மல்யுத்த வீரர் வினேஷ் போகத் குறித்த கேள்விக்கு பதிலளித்த சைனி, இந்தியா வந்தவுடன் அவரை வரவேற்றதாக பதிலளித்தார். வினேஷ் போகத் எங்கள் மகள், நாங்கள் அவளைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹரியாணா பேரவைத் தேர்தலை பாஜக தனித்து சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.