
காங்டோக்: கனமழை காரணமாக சிக்கிமில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, தீஸ்தா நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த 510 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 17 - 18 வீடுகளும் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் சிங்டாம் அருகே திப்பு தாரா பகுதியில் இன்று மிகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால், தீஸ்தா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ஹைட்ரோஎலக்ட்ரிக் மின் நிலையம் சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக, கடந்த ஒரு வாரமாகவே, இந்த மின் நிலையப் பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவுகள் நேரிட்டு, அபாயத்தை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை, மின் நிலையத்தின் அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, சேதமடைந்திருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பே, மின் நிலையத்திலிருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மின் நிலையம் அருகே இருந்தவர்கள் நிலச்சரிவை செல்போன்களில் விடியோ எடுத்திருந்தது தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய ஏரி வெடிப்பின்போது, ஐந்தாம் நிலை அணையானது சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.