கொச்சி தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி!

கொச்சி தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க இருக்கிறது.
தற்காப்புக் கலை பயிற்சி
தற்காப்புக் கலை பயிற்சி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதையடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

கேரளத்தின் கொச்சியில் உள்ள வி.பி.எஸ்.லேக்ஷோர் மருத்துவமனை, மாநிலம் முழுவதும் இந்த முயற்சியை செயல்படுத்த ஆரம்பத் தொகையாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இந்தப் பயிற்சித் திட்டம் கட்டாயமாக இருக்கும். மருத்துவமனை பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி, மாநில அரசின் ஆதரவுடன் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், மருத்துவமனை பெண் ஊழியர்களைத் தவிர சுமார் 50,000 பெண்களுக்கு 6 மாதங்களுக்குள் இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ள அறிக்கையில், “தற்காப்புக் கலைப் பயிற்சி அவர்களின் உடல் ரீதியான பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மன வலிமையையும் அதிகரிக்கும்.

பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இதரப் பகுதிகளில் பயிற்சி பெற்ற நபர்கள் கற்றுக்கொடுக்க பணியமர்த்தப்படுவார்கள். தற்காப்புக் கலைப் பயிற்சித் திட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே’ போன்ற பொருள்கள் அடங்கிய பாதுகாப்புக் கருவிகளை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மருத்துவமனை தனது சொந்த மொபைல் செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த செயலி பிரத்யேகமாக அவசர காலத்தில் உதவக்கூடிய செயல்பாட்டைக் கொண்டுள்ளது. எதேனும் அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்யும் வகையில் செயல்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.