வெளியுறவு விவகாரங்களில் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலையிடக் கூடாது என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் இன்று(ஆக. 26) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கே நடப்பது போன்ற தவறுகள் இங்கு அரங்கேறக் கூடாது. நாம் பிளவுபட்டால் துண்டிக்கப்படுவோம், ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்” என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் பேசியதை விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி செய்தியாளர்களுடன் பேசியபோது கூறியதாவது, “ஆதித்யநாத் பிரதமராக ஆசைப்படுகிறார். ஆனால், அதற்காக பிரதமரை போல செயல்படக்கூடாது. வங்கதேச விவகாரம் குறித்து பேசுவது பிரதமரின் பணி. நாம் எந்த நாட்டுடன் உறவைக் கடைபிடிக்க வேண்டுமென்பதை இந்திய அரசு தீர்மானிக்கும்” என்றார்.