லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார்.
புதிய மாவட்டங்களாக ஜான்ஸ்கார், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் வகையில், யூனியன் பிரதேசமான லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இதனால், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி அரசு உறுதி கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லடாக்கில் தற்போது லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.