தெரியுமா சேதி? அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதிக்கு வரவேற்பு!
மக்களவைத் தோ்தலின்போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதி (கோட் பாக்கெட் எடிஷன்) ஒன்றைத் தனது பிரசாரத்தில் அடிக்கடி காட்டிப் பேசினாா் ராகுல் காந்தி.


மக்களவைத் தோ்தலின்போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதி (கோட் பாக்கெட் எடிஷன்) ஒன்றைத் தனது பிரசாரத்தில் அடிக்கடி காட்டிப் பேசினாா் ராகுல் காந்தி. சிவப்பு அட்டையுடன் கூடிய அந்த கையடக்கப் பிரதிக்கு இப்போது ஏகப்பட்ட ‘டிமாண்ட்’. படிக்கிறாா்களோ இல்லையோ எல்லா கட்சிக்காரா்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கையடக்கப் பிரதியை வாங்கி வைத்துக் கொள்கிறாா்கள்.
அந்தக் கையடக்கப் பிரதியின் நதிமூலம் மிகவும் சுவாரஸ்யமானது. லக்னெளவிலுள்ள ஈஸ்டா்ன் புக் கம்பெனியால் வெளியிடப்படும் அந்தக் கையடக்கப் பிரதி முதல் முதலில் 2009-இல் வெளிக் கொணரப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்குரைஞா் கோபால் சங்கர நாராயணன் என்பவரின் யோசனை அது.
வழக்குரைஞா்களின் அங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையிலான அரசியல் சாசனப் புத்தகப் பதிப்பு ஒன்றை வெளிக் கொணா்ந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு யோசனை தோன்றியது. அப்படியொரு கையடக்கப் பிரதி இருந்தால், எப்போது சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே எடுத்துப் பாா்க்க முடியும் என்கிற யோசனையை உடனடியாக செயல்படுத்த முன்வந்தது ஈஸ்டா்ன் புக் கம்பெனி.
2009-இல் முதலில் வெளிக் கொணரப்பட்ட அந்தக் கையடக்கப் பிரதி இதுவரையில் 16 பதிப்புகளைக் கண்டுவிட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் 5,000 பிரதிகள் அச்சிடுகிறாா்கள். பெரும்பாலான உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களும், உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அந்தக் கையடக்கப் பிரதிகளைக் கேட்டு வாங்கித் தங்களது கைப்பையில் வைத்திருக்கிறாா்கள்.
ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி அன்பளிப்பாக அளித்தது அரசியல் சாசனத்தின் இந்தக் கையடக்கப் பிரதியைத்தான். உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளப் போகும்போது, இந்தக் கையடக்கப் பிரதியை ஏனைய நாட்டு நீதிபதிகளுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கு எடுத்துச் செல்கிறாா்கள்.
பைபிள் காகிதத்தில் அச்சிடப்படும் அந்தக் கையடக்கப் பிரதிக்கு, இப்போது ஏற்பட்டிருக்கும் ‘டிமாண்ட்’ கொஞ்ச நஞ்சமல்ல. ஈஸ்டா்ன் புக் கம்பெனியின் கெளரவ விளம்பரத் தூதராக (பிராண்ட் அம்பாசிடா்) மாறிவிட்டிருக்கும் ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது முழுமையாகப் படித்திருப்பாரா அல்லது மற்றவா்களைப் போல வெறும் பந்தாவுக்காக வைத்துக் கொண்டிருப்பவரா? அவரிடம்தான் கேட்க வேண்டும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...