விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி பஞ்சாபின் விவசாயிகள் பிரிவு புதன்கிழமை பஞ்சாபின் மொஹாலி நகரில் போராட்டம் நடத்தினர்.
கங்கனாவின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் முழக்கம் எழுப்பியுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக அவர் பேசுவது இது முதல் முறை அல்ல என்றும், அவரை உடனடியாக கட்சியிலிருந்து பாஜக வெளியேற்ற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினர்.
பஞ்சாபில் உள்ள பாஜக அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், மொஹாலியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ``தங்கள் கருத்துகளால் நாட்டின் சூழ்நிலையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் கங்கனா ரணாவத் போன்ற சர்ச்சைக்குரிய எம்.பி.க்களை பாஜக கட்டுப்படுத்த வேண்டும்.
கங்கனாவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்த மண்டி தொகுதியின் மக்கள் நலனில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர் தனது ஆதாரமற்ற அறிக்கைகள் மூலம் பஞ்சாப் மக்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் புண்படுத்துகிறார்’’ என்று கூறினார்.
சண்டிகரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி பஞ்சாப் எம்.எல்.ஏ. ஜக்தார் சிங் தயால்புரா, ``கங்கனாவை கட்சியிலிருந்து பாஜக வெளியேற்ற வேண்டும். அவர் சமூகத்தில் வெறுப்பின் விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்.
மேலும், அவரது கருத்துகளுக்காக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனா தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்து எங்கள் கட்சியின் கருத்து அல்ல. அவர் தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
கட்சியின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் அதிகாரம் கங்கனாவுக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.