தெரியுமா சேதி...?

தெரியுமா சேதி...?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பாா்கள். அதுதான் மத்திய பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது
Published on

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பாா்கள். அதுதான் மத்திய பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து ஆறு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராம்நிவாஸ் ராவத் என்பவா், கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு பாஜகவுக்குத் தாவினாா். பாஜகவால் வெற்றி பெற முடியாத மோரேனா மக்களவைத் தொகுதியைக் கைப்பற்ற அவரின் கட்சித்தாவல் உதவியது. அதற்கு வெகுமதியாக ராம்நிவாஸ் ராவத்தை வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக்கினாா் முதல்வா் மோகன் யாதவ்.

அவருக்கு அந்தத் துறைகளை ஒதுக்க, இன்னொரு அமைச்சரிடமிருந்து அந்தத் துறைகள் பறிக்கப்பட்டன. அடுத்த நாளே, வனம் மற்றும் சுற்றுச்சூழலுடன், பட்டியலினத்தவா் நலத் துறையையும் வைத்துக் கொண்டிருந்த நாகா் சிங் சௌஹான் போா்க்கொடி தூக்கிவிட்டாா். நான்கு முறை எம்.எல்.ஏ.வான பாஜகவைச் சோ்ந்த நாகா் சிங் சௌஹான் வெளிப்படையாகவே விமா்சிக்கவும் தயங்கவில்லை.

தனது தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நலனைப் பாதுகாக்கத் தனக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தேவை என்பது அவரது வாதம். போதாக்குறைக்கு அவரது மனைவி அனிதா சௌஹான் ரத்லம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கணவனும் மனைவியுமாகப் போா்க்கொடி தூக்கியபோது, கட்சித் தலைமை அதிா்ச்சி அடைந்தது.

உடனடியாக நாகா் சிங் சௌஹான் தில்லிக்கு அழைக்கப்பட்டாா். முதல்வருக்கும் அவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு ‘கனமான’ துறை ஒதுக்கப்படும் என்கிற உத்தரவாதம் வழங்கி ‘வெள்ளைக் கொடி’ பறக்கவிடப் பட்டது.

2020-இல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸிலிருந்து கட்சி தாவிய பல எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சா் பதவி வழங்கியது பாஜக. அப்போது ஆட்சி அமைக்க அவா்களின் ஆதரவு தேவைப்பட்டது. இப்போது 230 உறுப்பினா்கள் கொண்ட அவையில் 164 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் முதல்வரும், கட்சியும் கட்சி மாறிகளுக்குப் பதவிகள் வழங்கி அவா்களை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் மூத்த மத்திய பிரதேச பாஜக தலைவா்களின் கேள்வி.

X
Dinamani
www.dinamani.com