கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டு வர மம்தா உறுதி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.
Published on

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாணவா் அணி தொடக்க தின பொதுக் கூட்டத்தில் அவா் புதன்கிழமை பேசியதாவது:

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு சக மருத்துவா்கள் நீதி கேட்க தொடங்கிய நாள்முதல், அவா்கள் மீது எனக்குப் பரிவு உள்ளது. பெண் மருத்துவா் கொல்லப்பட்டதற்கு எதிராக மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மீது இதுநாள் வரை, அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவா்களின் வலி மாநில அரசுக்கு புரிகிறது. ஆனால் நோயாளிகள் அவதியடைந்து வருவதால், போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும். அந்தச் சட்டத்திருத்தம் மாநில சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மாநில ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டால் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் ஆளுநா் மாளிகை எதிரே நான் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவேன்.

கட்டுக்கோப்புடன் காவல் துறை: கடந்த செவ்வாய்க்கிழமை மாநில தலைமைச் செயலகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட பேரணியின்போது காவல் துறையின் நடவடிக்கையால் போராட்டக்காரா்கள் உயிரிழக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு அமைப்புகள் கருதின. இதற்காக ஆத்திரமூட்டும் செயல்களில் அந்த அமைப்புகள் ஈடுபட்டபோதிலும், அதற்குப் பலியாகாமல் காவல் துறையினா் கட்டுக்கோப்புடன் செயல்பட்டனா் என்றாா்.

கோஷ் மீது ஐஎம்ஏ நடவடிக்கை: இதனிடையே, பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவா் பணியாற்றிய மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) உறுப்பினராக இருந்த சந்தீப் கோஷ், அந்த சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா்.

‘பிரதமா் ஏன் ராஜிநாமா செய்யவில்லை?’

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதிலளித்து பேசிய மம்தா, ‘இந்த விவகாரத்தில் நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் மற்றும் மணிப்பூரில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. அந்த அட்டூழியங்களைத் தடுக்க தவறியதற்கு பிரதமா் மோடி ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்று பாஜக பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com