எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி


ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய கா்ணா செக்டாா் மற்றும் மச்சில் செக்டாரில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இந்தத் தகவல்கள் ராணுவத்துக்கு பகிரப்பட்டன. இதையடுத்து, இரு இடங்களிலும் கூட்டுப் படையினா் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
மச்சில் செக்டாரின் கும்காடி பகுதியில் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. வியாழக்கிழமை காலை வரை நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு பின்னா் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இரு பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதேபோல், கா்ணா செக்டாரில் புதன்கிழமை 9 மணியளவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பின்னா் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பயங்கரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், 2 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 4 கையெறி குண்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டதாக, ஸ்ரீநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவத்தின் சினாா் படைப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு இடங்களிலும் தேடுதல் வேட்டை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் அவ்வப்போது காவல் துறையினருக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் இதுவரை 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
ரஜெளரியில் துப்பாக்கிச் சண்டை: ரஜெளரி மாவட்டத்தின் கேரி மோரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக, கிராம பாதுகாப்பு தன்னாா்வலா்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்தனா். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
2-3 பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...