மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் மோதியதில் பால் வியாபாரி பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த மஹிந்திரா ஸ்கார்பியோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் பால் கொண்டு சென்ற வியாபாரி நவின் வைஷ்ணவ் (24) பரிதாபமாக பலியானார்.
வாகனத்தை ஓட்டிவந்த 17 வயதான சிறுவன் தப்பியோட முயன்ற நிலையில் அவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
நவின் வைஷ்ணவ் என்பவர் அதிகாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பால் விநியோகம் செய்ய சென்ற போது தவறான பாதையில் எதிரே வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ, அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இருசக்கர வாகனத்தில் மோதிய கார், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் காயத்துடன் தப்பிக்க முயன்ற நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
காயமடைந்த பால் வியாபாரியான நவீன் வைஷ்ணவை மீட்ட அங்கிருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், கார் உரிமையாளரான இக்பால் ஜிவானி (48) மற்றும் அவரது மகன் முகமது பாஸ் (21) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் உதவியுடன் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய சிறுவனின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோல, மே 19 அன்று , புணேவில் 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற போர்ஷே கார், பைக் மீது மோதியதில், இரண்டு ஐடி பொறியாளர்களான அனீஷ் அவாதியா, அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் பலியானது குறிப்பிடத்தக்கது.