நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடக்கி வைத்தார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் செப். 2 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, எழும்பூா் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேவையுடன் புதிதாக இரண்டு ரயில் சேவைகள் இணைந்துள்ளன.
தமிழகத்தின் கோயில் நகரமான மதுரையிலிருந்து, கர்நாடகத்தின் தொழில் நகரமான பெங்களூருவை இணைக்கும் வகையில் ஒரு வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இதனுடன் எழும்பூா்- நாகா்கோவில் இடையே என இரண்டு ரயில்களுக்கான கால அட்டவணையும் இந்திய ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எல். முருகன், முன்னாள் தெலங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "அடுத்த சில ஆண்டுகளில் நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருப்போம் என்பது உலகிற்குத் தெரியும். இது புதிய இந்தியாவின் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் உறுதி" என்று குறிப்பிட்டார். மேலும், சாலைகள், ரயில்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் மத்திய அரசின் நிதி உதவியால்தான் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் எல். முருகன் பேசுகையில், "சென்னையை மையமாகக் கொண்டு பெங்களூரு, திருப்பதி, விஜயவாடா, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு 6,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது" என்றார்.
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் எழும்பூா் - நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ரயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும். மற்ற நாள்களில் எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
மதுரையிலிருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் வீ.சோமண்ணா மதுரை - பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலை தொடக்கவிழாவில் பங்கேற்றார்.
இந்த ரயில்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டாலும் செப். 2 -ஆம் தேதிமுதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
கட்டணம் எவ்வளவு?: எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்ஸிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்ஸிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.
ரயில் அட்டவணை
எழும்பூா்- நாகா்கோவில் ரயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 20628) நாகா்கோவிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.
மதுரை - பெங்களூரு ரயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 20672) பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும்.