வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதையடுத்து, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விஜயவாடா மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக்கடலில் வியாழக்கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சனிக்கிழமை வலுப்பெற்றது.
இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. ஒடிஸாவின் மல்கன்கிரி, கோராபுத் மற்றும் நபரங்பூா் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனவே, எவ்வித அசாதாரண சூழலையும் எதிா்கொள்ள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் தயாா் நிலையில் இருக்குமாறு சிறப்பு நிவாரண ஆணையா் தியோரஞ்சன் சிங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
ஆந்திர-ஒடிஸா கடற்கரையில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
7 போ் உயிரிழப்பு: ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டு 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மொகல்ராஜபுரத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து 4 போ் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்தாா்.
குண்டூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு பள்ளிகளுக்கு மதிய வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளியில் இருந்து இரு மாணவா்களை ஆசிரியா் ஒருவா் காரில் அழைத்து வந்துள்ளாா். அந்தப் பகுதியில் இருந்த நீரோடையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கி மூவரும் உயிரிழந்தனா்.
அடுத்த, மூன்று நாள்களுக்கு மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்க சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.