
தில்லியின் தனித்துவமான மொஹல்லா பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் மற்றும் பிற சேவைகளை முதல்வர் அதிஷி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தில்லி எல்லையின் கடைசி மைல் வரை பொதுமக்களின் பேருந்து போக்குவரத்து சிக்கலைத் தீர்க்கும் வகையில் மொஹல்லா பேருந்து சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களின் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில்,
தலைநகரில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மொஹல்லா பேருந்துகளின் இயக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தில்லி சாலைகளில் இயக்கப்படும்.
மொஹல்லா பேருந்துகள் குறிப்பாக குறுகிய சாலைகள் உள்ள பகுதிகள் அல்லது வழக்கமான 12 மீட்டர் பேருந்துகள் இயக்க முடியாத அளவுக்கு நெரிசலான பகுதிகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்கல்கள் இருந்துவருகின்றன. தில்லி எல்லையின் கடைசி மைல் வரை உள்ள சிக்கலைத் தீர்க்க தில்லியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொஹல்லா பேருந்துகள் இயக்கப்படும்.
மொஹல்லா பேருந்து சேவையை நகரம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான தில்லி அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம், தில்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் எம்எல்ஏ சோம்நாத் பாரதி ஆகியோர் கைலாஷ் காலனி மெட்ரோ நிலையத்திலிருந்து பிஎன்பி கீதாஞ்சலி காலனி வரையிலான புதிய வழித்தடத்தில் மொஹல்லா பேருந்தை (சோதனை) தொடங்கி வைத்தனர்.
இரண்டாவது, லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையம் முதல் வசந்த் விஹார் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இந்த பாதை தெற்கு வளாகத்தின் 6-7 கல்லூரிகளை உள்ளடக்கியதாகும்.
தற்போது, இரண்டு பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்றன, பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் கூடுதல் வழித்தடங்கள் தீர்மானிக்கப்படும்.
2025-ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 2,180 பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது, குறிப்பாக சாலை அகலம் குறைவாக உள்ள பகுதிகள், நெரிசல் காரணமாக வழக்கமான 12 மீட்டர் பேருந்துகள் இயக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.