
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை இன்று (டிச. 10) சந்தித்தார்.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள க்ரெம்லின் பகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அன்ரெய் பெலோசெளவ் உடன் இருந்தார்.
3 நாள்கள் பயணமாக ரஷியா சென்றுள்ள ராஜ்நாத் சிங், இந்தியா - ரஷிய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக க்ரெம்லின் சென்றார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜ்நாத் சிங்கை விளாதிமீர் புதின் கைகுலுக்கி வரவேற்றார். அப்போது, அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை ராஜ்நாத் சிங் தெரிவித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், ஒருங்கிணைந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் இரு நாட்டுத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
பேச்சுவார்த்தையின்போது ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது, ''இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு உயரமான மலைகளை விட உயரமானது, ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா எப்போதும் ரஷிய நண்பர்களுக்குத் துணையாக இருக்கும். எதிர்காலத்திலும் இது தொடரும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி தோல்வி! திரிணமூல் எம்.பி.,
கடந்த 5 மாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவிற்கு பயணம் செய்தபோது அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இந்தியா - ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.