

புதிய பரிமாணங்களால் தற்போது போர்கள் சிக்கலாகியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலையில் நடுத்தர வெடிபொருள் தயாரிப்புப் பிரிவின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ராணுவத் தளவாட உற்பத்தி என்பது ஒருகாலத்தில் பொதுத்துறையை மட்டுமே சார்ந்திருந்தது. இதில் தனியார் துறை பங்களிக்க முடியும் என்று யாரும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.
தற்போது ராணுவத் தளவாட உற்பத்தியில் பங்களிக்கும் திறன் தனியார் துறையிடம் உள்ளது. ஆனால் அத்துறையின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இல்லை.
தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு அடியெடுத்து வைத்தபோது பாதுகாப்புத் துறை ராணுவத் தளவாட உற்பத்தி தொடர்பான சவால்களும் சந்தேகங்களும் எழுந்தன. எனினும் தற்போதைய மத்திய அரசு கொள்கைகளில் மாற்றங்களை அறிமுகம் செய்து, நடைமுறைகளை எளிதாக்கியதன் மூலம் இத்துறையை தனியாருக்குத் திறந்துவிட்டது. அதன் விளைவாக ராணுவத் தளவாட உற்பத்தி மேம்பட்டதுடன், நல்ல தரமான பாதுகாப்புச் சாதனங்களும் தயாரிக்கப்படுகின்றன. நமது பாதுகாப்பு கட்டமைப்பு நன்கு மேம்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. வெடிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுகிறது. எனினும் இத்துறையில் தற்சார்பை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நமது முப்படைகள் எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணைகள், நாகாஸ்திரா ட்ரோன்கள் ஆகியவற்றை சோலார் குழுமம் தயாரித்துள்ளது பாராட்டத்தக்கது.
வெடிபொருள் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்காகும். புதிய பரிமாணங்களால் தற்போது போர்கள் சிக்கலாகியுள்ளன. இந்தச் சூழலில் போருக்கான ஆயத்தநிலை என்பதே போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும். போரின் தன்மை வேகமாக மாறிவருகிறது.
போர்கள் தற்போது எல்லைகளை மட்டும் சார்ந்ததாக இல்லை. அவற்றின் விளைவை நாட்டில் உள்ள சாமானிய மக்களும் உணர்கின்றனர். எரிசக்தி, வர்த்தகம், வரி, விநியோகச் சங்கிலிகள், தொழில்நுட்பம், தகவல் போன்றவை பூசலுக்கான புதிய பரிமாணங்களாக உருவாகியுள்ளன.
இந்த மாற்றம் காரணமாக எல்லைகள், ஆயுதங்கள், ராணுவத் தளவாட உற்பத்தி ஆகியவை தொடர்பான நாட்டின் உஷார்நிலை அதிகரித்துள்ளது. எந்த வகையான போராக இருந்தாலும் தனியார் துறையின் வலுவான பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவையே இப்போதைய தேவையாகும்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 50 சதவீதம் அளவுக்குத் தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. கடந்த 2014}ஆம் ஆண்டு ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.30,000 கோடியாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி தற்போது ரூ.25,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதை வரும் 2029}30}ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.