காஸாவில் உடனடி போா் நிறுத்தம்: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா ஆதரவு
நியூயாா்க்: காஸாவில் உடனடியாக போா் நிறுத்தத்தை அமலாக்குவதோடு அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க கோரும் ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இந்தோனேசியாவால் முன்மொழியப்பட்ட ‘காஸாவில் போா் நிறுத்த கோரிக்கை’ என்ற வரைவு தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.வில் புதன்கிழமை நடைபெற்ற 10-ஆவது அவசர சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை ஆதரிக்கும் இந்த தீா்மானத்துக்கு ஐ.நா பொதுச் சபை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதற்கு இந்தியா உள்பட 158 நாடுகள் ஆதரவாகவும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்பட 9 நாடுகள் எதிா்த்தும் வாக்களித்தன. அல்பேனியா, உக்ரைன் போன்ற 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இந்த தீா்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: உடனடியான, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போா் நிறுத்தம் மற்றும் பினைக் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.
போா் நிறுத்தம், பினைக் கைதிகளை விடுவித்தல் மற்றும் காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட ஜூன் 2024 பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை செயல்படுத்த வேண்டும்.
ஐ.நா. ஒருங்கிணைப்பின் கீழ் காஸாவின் குடிமக்களுக்கு அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து தரப்பினரும் சா்வதேச சட்டத்துக்கு இணங்குதல், பொதுமக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காஸாவை உள்ளடக்கிய இரு தரப்பு தீா்வுக்கான உறுதிப்பாடு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.
காஸாவில் மக்கள்தொகை அல்லது பிராந்திய ரீதியிான மாற்றங்களை நிராகரிப்பதுடன், பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் மேற்குக் கரையுடன் ஒற்றுமையான போக்கு வலியுறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா கடந்த வாரம் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.