
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்தியாவின் விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள் தொடர்பான ஆய்வுகள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு முன்னர் போதுமான அளவில் செய்யப்படவில்லை. இந்த ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவில் பங்களிக்கும்.
இந்தியா தனது விண்வெளித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் பாதையில் உள்ளது. விண்வெளிப் பொருளாதாரத்தில் கடந்த 2014-க்குப் பிறகு இந்தியா பெரிய முன்னகர்வை எடுத்துள்ளது. தற்போது, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்திய விண்வெளித் துறையின் பங்களிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 3 மடங்கு உயரும். இது பிரமரின் தலைமை இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.
இந்தியா தன்னிடம் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு எவ்வாறு ஆக்கப்பூர்வமான முறையில் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நமது பிரதமர் விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டுள்ளார். இதன்மூலம், ஏராளமான புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
நாசா நிறுவனத்திற்குப் பிறகு இஸ்ரோ உருவாகியிருந்தாலும், நாம் உலகின் எந்த விண்வெளி அமைப்பை விடவும் பின்தங்கியிருக்கவில்லை. நாளுக்கு நாள் நமது வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதுவரை, நாம் 432 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறோம். அதில், 397 செயற்கைக் கோள்கள் 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் செலுத்தப்பட்டவை.
ஆரய்ச்சி செய்யப்படாத புதிய பகுதிகளை நாம் ஆராயவேண்டும். நம்மிடம் வளங்கள் மற்றும் ஆற்றல்களுக்குப் பஞ்சமில்லை. வருகிற 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென தனி விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு புதிய விண்வெளிக் கொள்கையின் படி பொதுத் துறைக்கு விண்வெளித் துறை திறந்துவிடப்பட்டதால், இது குறிப்பிடத்தக்க ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.