
மும்பையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதற்கு கடற்படையின் படகு மோதியதே காரணம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான எலிபேண்டா தீவுக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகின் மீது கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக படகு ஒன்று அதிவேகத்தில் மோதியதில் பயணியர் படகு பலத்த சேதமடைந்தது.
இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய கடற்படை படகு ஒன்று மும்பை துறைமுகத்தில் இன்ஜின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த படகு பயணிகலை ஏற்றிச் சென்ற படகில் மோதியதில் அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து உடனடியாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இந்திய கடற்படையின் 11 படகுகளும் கடலோர காவல்துறையின் 3 படகுகளும் கடலோரக் காவல்படையின் ஒரு படகும் ஈடுபட்டுள்ளது. 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையும் அவர் அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகில் 114 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இதுவரை 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.