"அம்பேத்கரை விரும்புபவர்கள்..." - நிதீஷ், சந்திரபாபுவுக்கு கேஜரிவால் கடிதம்!

அமித் ஷா விவகாரத்தில் நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதிய அரவிந்த் கேஜரிவால்.
"அம்பேத்கரை விரும்புபவர்கள்..." - நிதீஷ், சந்திரபாபுவுக்கு கேஜரிவால் கடிதம்!
Published on
Updated on
1 min read

அமித் ஷா விவகாரத்தில் பாஜக கூட்டணித் தலைவர்களான நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால்.

மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும்,. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணித் தலைவர்களான நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

"அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திகைக்க வைத்துள்ளது. அம்பேத்கரை மிகவும் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார். இது அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது. அவர் பேசியது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் பற்றி பேசியதற்கு அமித் ஷா மன்னிப்பு கேட்காமல் அதனை நியாயப்படுத்த முயற்சிக்கிறார். பிரதமர் மோடியும் அமித் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து மக்களை மேலும் காயப்படுத்தியுள்ளார்.

இந்த சமூகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிமைகள் கிடைக்கச் செய்தவர் அம்பேத்கர். அவர் தலைவர் மட்டுமல்ல. நாட்டின் உயிர்நாடி.

அம்பேத்கரை விரும்புபவர்கள் பாஜகவுக்கு ஒருபோதும் ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் உங்களின்(நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு) பதிலை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களை மட்டுமே பெற்றது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், நிதீஷ் குமாரும்(12 இடங்கள்) சந்திரபாபு நாயுடுவும்(16 இடங்கள்) பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com