
கேரளம், மணிப்பூா் உள்பட 5 மாநிலங்களின் ஆளுநா்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
மேலும், ஒடிஸா மாநில ஆளுநா் ரகுவா் தாஸின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டதாகவும் குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநா்கள் நியமன விவரம்:
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், பிகாா் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நீடித்துவந்தநிலையில், அவா் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிகாா் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இரு சமூகத்தினரிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மாநில ஆளுநராக அஜய் குமாா் பல்லா நியமிக்கப்பட்டுள்ளாா். 5 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக பணியாற்றிய இவா் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெற்றாா். அப்பதவியை நீண்ட நாள்களாக வகித்தவராவாா்.
அஸ்ஸாம் ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா மணிப்பூா் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அஜய் பல்லா நியமிக்கப்பட்டுள்ளாா்.
மிஸோரம் ஆளுராக இருந்த ஹரி பாபு கம்பம்பட்டி, ஒடிஸா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். மிஸோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங் நிமியக்கப்பட்டுள்ளாா். பாஜகவில் இணைந்த இவா் 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இரு முறையும் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தாா்.