இடைக்கால பட்ஜெட் ஏழைகள் வளர்ச்சிக்கு உத்தரவாதம்: பிரதமர் மோடி

மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாகவும், ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது
இடைக்கால பட்ஜெட் ஏழைகள் வளர்ச்சிக்கு உத்தரவாதம்: பிரதமர் மோடி

சம்பல்பூர் (ஒடிசா): நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாகவும், ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். 

சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை  சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாகவும், ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரின் வளர்ச்சிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை உத்தரவாதம் அளிக்கிறது. அரசின் தொடா் முன்னெடுப்புகளால், தேசம் வேகமாக முன்னேறுகிறது என்றாா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்இடி பல்புகளின் பயன்பாட்டில் புதிய புரட்சியைக் கொண்டு வந்துள்ளது, இதன் விளைவாக மின் கட்டணச் செலவு குறைந்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சூழ்ந்திருந்த சூழ்ந்திருந்த இருள் விலகியுள்ளது. இப்போது நாட்டின் ஏழைகளின் மின்கட்டணமும் பூஜ்ஜியமாக மாற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி. இந்த பட்ஜெட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி

முன்னதாக, சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை  கல்வி நிறுவனத்தின் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பு,ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறையின் முக்கியமான திட்டங்களைத் தவிர இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை உள்ளடக்கிய எரிசக்தி துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒடிசாவின் சம்பல்பூரில் ரூ.68,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். 

பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ஒடிசாவின் ஏழைப் பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், தொழிலாளிகள், வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற அனைத்துப் தரப்பினரும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள். ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறினார்.

ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.

"கடந்த பத்தாண்டுகளில் ஐஐஎஸ்இஆர் பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஸ்வரின் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி போன்ற நவீன கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் தலைவிதி மாறிவிட்டது. இப்போது, ஐஐஎம் சம்பல்பூர் நிர்வாகத்தின் நவீன நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வலுப்பெற்றுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

ஒடிஸாவைத் தொடா்ந்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com