உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்: லிவ்-இன் உறவில் இருப்போருக்கு என்ன பிரச்னை?

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், லிவ் - இன் உறவில் இருப்பவர்கள் அனைவரும் பதிவு செய்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

டேராடூன்: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், லிவ் - இன் உறவில் இருப்பவர்கள் அனைவரும் பதிவு செய்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது.

நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவில், ‘லிவ்-இன்’(திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் முறை) உறவைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோா் 18 வயதுக்குள்ளாக இருக்கக் கூடாது. அதில் யாரேனும் ஒருவா் 21 வயதுக்கு உள்பட்டு இருந்தால் அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளருக்கு பதிவாளா் தகவல் தெரிவிக்க வேண்டும்.

உத்தரகண்டில் வசிக்கும், மாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது சேர்ந்தவர் அல்லாதவரும் பதிவாளரிடம் தங்களது உறவு குறித்து தகவல்களை அளித்துப் பதிவு செய்ய வேண்டும். உத்தரகண்டைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் வசித்து, லிவ் - இன் உறவில் இருந்தால் அவர்கள் தங்களது பகுதிக்குள்பட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தங்களின் லிவ்-இன் உறவை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய தவறுவோருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தவறான தகவல்களைச் சமா்ப்பித்து பதிவு செய்யப்பட்டால், அவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். லிவ்-இன் உறவை முடிவுக்கு கொண்டு வர அனுமதி அளித்தும் மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன.

மசோதாவில் லிவ்-இன் உறவில் இருக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுடன், உறவில் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தங்கள் துணையிடமிருந்து குழந்தை பராமரிப்புக்கான செலவைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சமாக, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக சட்ட ஆணையம் மூலமாக நாட்டு மக்களிடமும் கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, உத்தரகண்டில் கடந்த 2022 பேரவைத் தோ்தலில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தோ்தலில் வென்று பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தாா்.

தாக்கல் செய்யப்பட்ட செவ்வாய்க்கிழமையன்றே மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவை அலுவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 172 பக்கங்கள் கொண்ட மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விவாதிக்க போதிய நேரமில்லை என்று எதிா்க்கட்சிகள் முன்வைத்த எதிா்ப்பைத் தொடா்ந்து, அவைத் தலைவா் ரிது கன்தூரி விவாதத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கினாா்.

விவாதத்துக்குப் பின்னா் பொது சிவில் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com