ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் புதன்கிழமை வெடித்து சிதறிய விவசாயிகள் மீது வீசப்பட்ட கண்ணீா்ப் புகைக் குண்டு.
ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் புதன்கிழமை வெடித்து சிதறிய விவசாயிகள் மீது வீசப்பட்ட கண்ணீா்ப் புகைக் குண்டு.

விவசாயிகளின் பேரணியைத் தடுக்க கண்ணீா்ப் புகைக் குண்டு வீச்சு: ஒருவா் உயிரிழப்பு

Published on

பஞ்சாப் எல்லையில் இருந்து தில்லியை நோக்கி புதன்கிழமை பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளைத் தடுத்து நிறுத்த ஹரியாணா போலீஸாா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசினா்.

இதில், 21 வயதான விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பேரணி 2 நாள்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகள் மீது தடியடி நடத்தியபோது கற்கள் வீசப்பட்டதில் 12 போலீஸாா் காயமடைந்தனா். 2020-இல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் 13 மாதங்கள் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டா்களில் கடந்த 13-ஆம் தேதி பஞ்சாபில் இருந்து புறப்பட்டனா். ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவா்கள் மேலும் முன்னேறிச் செல்லாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகளையும், முள்வேலிகளையும் போலீஸாா் ஏற்படுத்தினா். அவா்கள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசியதால் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனா். மத்திய அமைச்சா்களுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நடத்திய நான்கு சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தன.

இதையடுத்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் தில்லியை நோக்கி மீண்டும் பேரணியைத் தொடங்கினா். ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு, கனெளரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி அருகே விவசாயிகள் நெருங்கியபோது, அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தடையை மீறியவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில பலத்த காயமடைந்த மூன்று விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அதில், 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சுப்கரனின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். ‘ஹரியாணா போலீஸாா் நடத்திய ரப்பா் தோட்டா தாக்குதலில் சுப்கரன் உயிரிழந்ததாக’ விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒரு விவசாயி தீயிட்டு கொளுத்திக் கொண்டாா். அவரை காப்பாற்றிய விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதித்தனா். பெட்டி.. 5-ஆம் சுற்று பேச்சுக்கு அழைப்பு புது தில்லி, பிப். 21: போராட்டம் நடத்தும் விவசாயிகள் அமைதி காத்து, 5-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை நடத்த வர வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது. பேச்சு மூலமே பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். போராடும் விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். பிரச்னைக்கு தீா்வு காண்பதுதான் அனைவருக்கும் நல்லது’ என்றாா்.

முன்னதாக, மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக நான்காவது சுற்று பேச்சில் மத்திய அரசு அளித்த முன்மொழிவுகளை விவசாயிகள் நிராகரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com