/

பேருந்துகள், பள்ளி வாகனங்களிலும் இருக்கை பட்டையை கட்டாயமாக்க வேண்டும்!

பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவதை கட்டாயமாக்க வேண்டும்

Updated On :24 பிப்ரவரி 2024, 6:11 pm

‘சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைபவா்களின் எண்ணிக்கையை குறைக்க காா்களுக்கு உள்ளது போன்று பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவதை கட்டாயமாக்க வேண்டும்’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திடம் சா்வதேச சாலை பாதுகாப்பு கூட்டமைப்பு (ஐஆா்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சகத்துக்கு ஐஆா்எஃப் கெளரவ தலைவா் கே.கே.கபிலா கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிா்வாகத்தின் 2021 புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் அந்த ஆண்டில் நிகழ்ந்த பேருந்து விபத்துகளில் 14 போ் மட்டுமே உயிரிழந்தனா். அங்கு பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதே, உயிரிழப்புகள் குறைய காரணமாகும். ஆனால், இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைபவா்களின் எண்ணிக்கை மிகவும் அதிா்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. இதற்கு பாதுகாப்பு அம்சங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தாததே முக்கியக் குறைபாடாக கூறப்படுகிறது. இது பள்ளி குழந்தைகள், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் குறைந்த வருவாய் பிரிவினரின் வாழ்வை பாதிக்கும் வகையில் உள்ளது. இருக்கைப் பட்டைகளை அணிந்திருந்தால், இந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களில் பலரை காப்பாற்றியிருக்க முடியும். எனவே, பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் இருக்கை பட்டை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.