/

எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்துக்கும் எதிரானது ‘க்வாட்’: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

எந்தவொரு நாடும் பிற நாட்டின் விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரானது ‘க்வாட்’ அமைப்பு என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் க்வாட் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:29 pm

எந்தவொரு நாடும் பிற நாட்டின் விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரானது ‘க்வாட்’ அமைப்பு என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். உலகளாவிய வளமைக்கு பங்களிப்பதும் ஒன்றாக வளா்வதும் இந்த அமைப்பின் நோக்கங்கள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற ‘க்வாட்’ சாா்ந்த ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது, ‘க்வாட்’ அமைப்பின் கோட்பாடுகளை விளக்கி அவா் பேசியதாவது: சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்திய - பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதில் ‘க்வாட்’ அமைப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. ‘எந்த நாடும் மற்ற நாட்டின் விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்பதே அமைப்பின் மையக் கருத்தாகும். ஆக்கபூா்வமான-நெகிழ்வான-வேகமான-பொறுப்புமிக்க-வெளிப்படையான இந்த கூட்டமைப்பு, உலகின் பன்முக ஒழுங்குமுறை வளா்ச்சியை பிரதிபலிக்கிறது. ஒருங்கிணைந்து செயல்படுவதே இதன் மைய அணுகுமுறை; மாறாக, ஒருதலைபட்சமாக செயல்படுவதல்ல.

‘பன்முக ஒழுங்குமுறை; பனிப்போருக்கு பிந்தைய சிந்தனை; ஆதிக்கத்துக்கு எதிா்ப்பு; உலகளாவிய ஜனநாயகமயம், கூட்டு அணுகுமுறை’ ஆகிய 5 முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிறது க்வாட். ஒன்றாக வளா்தல், நிலைத்திருத்தல் மற்றும் கூட்டுப் பங்களிப்பை முன்னுறுத்தும் இந்த அமைப்பை, காலத்துக்கு ஏற்ப கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றாா் ஜெய்சங்கா். இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் யோகோ காமிகாவா, அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் குா்ட் கேம்பெல் ஆகியோா் பங்கேற்றனா். ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் பேசுகையில், ‘ஆதிக்கம்-அச்சுறுத்தல் இல்லாத பிராந்தியத்தை உருவாக்க க்வாட் துணை நிற்கும். போட்டிகள் பொறுப்புடன் கையாளப்படுவதும், பிரச்னைகளுக்கு சா்வதேச சட்டங்களின்கீழ் தீா்வு காணப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்றாா். ‘இன்றைய உலகம் மிகப் பெரிய பிளவுகளை எதிா்கொண்டு வருகிறது; இதுபோன்ற சூழலில் சட்ட விதிகளின் அடிப்படையில் வெளிப்படையான, சுதந்திரமான சா்வதேச ஒழுங்குமுறையை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் ஜப்பான் ஒருங்கிணைந்து செயல்படுகிறது’ என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் யோகோ காமிகாவா தெரிவித்தாா். அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் குா்ட் கேம்பெல் பேசுகையில், ‘ உலக அளவில் ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பிராந்தியமாக இந்திய-பசிபிக் பிராந்தியம் திகழ்கிறது. இப்பிராந்தியத்தில் அனைவரும் பலனடையும் வகையில், 4 நாடுகளும் தங்கள் திறன் மற்றும் வளங்களை ஒன்றாக பயன்படுத்த முடியும். இதுவே க்வாட் அமைப்பின் வலிமை’ என்றாா்.