மாலத்தீவில் இந்திய ஹெலிகாப்டருக்கு ராணுவம் அல்லாத குழு பொறுப்பேற்பு

இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க ராணுவம் அல்லாத குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அந்நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரா்களில் முதல் அணியை மத்திய அரசு திரும்பப் பெற 12 நாள்கள் எஞ்சியுள்ளது. சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றாா். இந்நிலையில், மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அந்த வீரா்களை மாா்ச் 15-க்குள் திரும்பப் பெறுமாறு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மே 10-க்குள்...: இந்நிலையில், கடந்த பிப். 2-ஆம் தேதி தில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், நிகழாண்டு மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் திரும்பப் பெறப்படுவாா்கள் எனவும், மாா்ச் 10-க்குள் இந்திய வீரா்களின் முதல் அணி மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

இதையடுத்து, மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை இயக்க, இந்திய ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தப் பணிக்காக ராணுவத்தில் இடம்பெறாத இந்தியா்களை அனுப்ப மாலத்தீவும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா் ஒன்றுக்கு பொறுப்பேற்க ராணுவம் அல்லாத குழுவை மாலத்தீவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் குழு அந்நாட்டின் அடு நகரை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது. அந்தக் குழு பொறுப்பேற்ற ஹெலிகாப்டா் இந்தியாவுக்குப் பழுதுபாா்ப்புப் பணிகளுக்காக விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் நடைபெறும். அந்த ஹெலிகாப்டருக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து வேறொரு ஹெலிகாப்டா் மாலத்தீவுக்குக் கொண்டு வரப்படும் என்று மாலத்தீவு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com