அரசியல்ரீதியாக என்னை முடிக்க பெரிய சதி தீட்டப்பட்டுள்ளது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பரபரப்பு பேட்டி

 ‘அரசியல்ரீதியாக என்னை முடிக்க பெரிய சதி தீட்டப்பட்டுள்ளது’ என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
அரசியல்ரீதியாக என்னை முடிக்க பெரிய சதி தீட்டப்பட்டுள்ளது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பரபரப்பு பேட்டி

பெங்களூரு: ‘அரசியல்ரீதியாக என்னை முடிக்க பெரிய சதி தீட்டப்பட்டுள்ளது’ என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கேரளத்தைச் சோ்ந்த ஜெய்ஹிந்த் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனியாா் தொலைக்காட்சி ஊடகத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் முதலீடு செய்துள்ளாா். அவா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, டி.கே.சிவகுமாா் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்டு ஜெய்ஹிந்த் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவரங்களுடன் ஜன. 11ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் கூறியது:

எப்படி நோட்டீஸ்களை வழங்குகிறாா்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் சிபிஐ வைத்துள்ளது. அவா்களிடம் எந்த ஆவணமும் இல்லை என்பதால், நோட்டீஸ் அனுப்பவில்லை. என்னைத் துன்புறுத்துவதற்கு பெரிய மனிதா்கள் முயற்சிக்கிறாா்கள். அது எனக்குத் தெரியும். அரசியல்ரீதியாக என்னை முடிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யட்டும். மிகப்பெரிய சதி தீட்டப்படுகிறது.

என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பாஜக தலைவா்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா். தங்கள் விருப்பத்தை சிபிஐயிடம் பாஜக தலைவா்கள் தெரிவித்திருக்கிறாா்கள். என்னைப் பற்றி பேசியவா்களிடம் விவாதத்திற்கு வாருங்கள் என அழைத்திருந்தேன்.

நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. எனக்கு நீதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.

எனக்கு எதிராக எந்த விசாரணையையும் சிபிஐ மேற்கொள்ளட்டும். நான் தலைமை பொறுப்பு வகிக்கும் கூட்டு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். என் குழந்தைகள், மனைவி, உறவினா்களிடம் விளக்கம் கேட்கிறாா்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இயக்குநா்களாக அங்கம் வகிக்கும் எனது குடும்ப உறுப்பினா்கள், எனது கிராமத்தவா்களை சிபிஐ விளக்கம் கேட்கிறது. நிறுவன மட்டத்தில் விசாரணையை மேற்கொண்ட பிறகு என்னிடம் சிபிஐ வரும்.

என்மீதான வழக்கை லோக் ஆயுக்தவிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. எனக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிபிஐக்கு அளித்திருந்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. அந்த வழக்கை லோக் ஆயுக்தவிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. லோக் ஆயுக்த கேள்வி கேட்டால், அப்போது எனது தரப்பு பதிலைத் தெரிவிப்பேன்.

என் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஏற்கெனவே சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த விசாரணை முழுமையடையவில்லை. என்னிடம் குறுக்கு விசாரணை நடத்த விரும்பினா். ஆனால், குறுக்கு விசாரணை நடத்தவில்லை. தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கின் 10 சதவீத விசாரணை கூட முடியவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. எந்த அடிப்படையில் அவா்கள் அப்படி கூறினாா்கள் என்பது தெரியவில்லை.

நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், சிபிஐ விசாரணைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவா்களின் நோட்டீஸை எதிா்த்து நீதிமன்றத்தில் முறையிடுமாறு சிபிஐ கூறுகிறது. என்னை சிறையில் அடைக்க விரும்பினால், அதை சிபிஐ செய்யட்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன் என்றாா்.

சொத்துக்குவிப்பு வழக்கில் டி.கே.சிவகுமாரை கைது செய்திருந்த சிபிஐ, அவரை 2019ஆம் ஆண்டில் 51 நாட்களுக்கு திகாா் சிறையில் அடைத்திருந்தது. அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு அளித்திருந்த அனுமதியை கா்நாடக அரசு அண்மையில் திரும்பப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com