புகழ்பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்

புகழ்பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 55.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..


கொல்கத்தா: புகழ்பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 55.

புற்றுநோய் பாதித்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த உஸ்தாத் ரஷீத் கானுக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

எங்களால் ஆன முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் அனைத்தும் தோல்வியடைந்தன. இன்று பிற்பகல் 3.45 மணியளவில் அவர் காலமானார் என்று உஸ்தாத் ரஷீத் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிளாசிக்கல் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக அறியப்படுபவர் உஸ்தாத் ரஷீத் கான். இவர் புகழ்பெற்ற பாடகர் இனாயத் ஹுசைன் கானின் பேரன் ஆவார்.  உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் கான், பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஏராளமான இந்தி திரைப்பட பாடல்களையும் பாடியவர். இவர், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

பாடகர் உஸ்தாத், உடல்நிலை பாதித்து தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்குச் சென்று உஸ்தாத் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் இசை உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று கூறினார். ரஷீத் மறைவால் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளேன், அவர் இப்போது நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அவரது உடல், ரபீந்திர சதன் வளாகத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com