குழந்தையைக் கொன்ற சுசனா நாட்டை உலுக்கியது எதனால்?

கடந்த ஆண்டில் குழந்தையை தாய் கொன்ற வழக்குகள் 5-க்கும் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் சுசனா வழக்கு நாட்டை உலுக்கியது எதனால்? 
சுசனா சேத்
சுசனா சேத்

கோவாவில் தனது 4 வயது மகனைக் கொலை செய்த பெண் தொழிலதிபரைக் காவல்துறையினர் கைது செய்தது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. இதுவரை, பெற்ற குழந்தை தாய் கொல்லும் குற்றங்கள் பல அரங்கேறியுள்ளன என்றபோதிலும் இந்த வழக்கு பரவலாக பேசப்பட காரணம் என்ன? 

கடந்த ஆண்டில் குழந்தையை தாயே கொலை செய்த வழக்குகள் ஐந்துக்கும் மேல் பதிவாகியுள்ளன. கடந்த ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பரில் பதிவான 2 வழக்குகளில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் காரணமாக இருந்துள்ளன.

நவம்பரில் பதிவான வழக்கில் மகனின் நோய் குணமாவதற்காக மகளை பலி கொடுத்ததாக கண்டறியப்பட்டது. டிசம்பரில் பதிவான வழக்கில் தொலைபேசியில் பேசவிடாமல் தொந்தரவு செய்த குழந்தையைக் கொலை செய்த தாயையும் பார்த்துள்ளோம். 

இந்த வழக்கு நாடு முழுவதும் பேசப்படுவதற்கு இரண்டு தரப்பு காரணங்கள் உள்ளன. முதல் காரணமாக பார்க்கப்படுவது, கொலை செய்த சுசனா, ஒரு வெற்றிப்பெண்ணாக திகழ்ந்தவர். 12 ஆண்டுகள் டேட்டா விஞ்ஞானியாக இருந்தது மட்டுமல்லாமல், செய்யறிவு தொழில்நுட்பத்துறையில் அறிவாளியான 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றவர்.

மைண்ட்ஃபுல் ஏஐ (Mindful AI) நிறுவனத்தின் நிறுவனரும் கூட! அவர் ஏன் இப்படிப்பட்ட கொலையைச் செய்ய வேண்டும்? இதிலென்ன மர்மம், காரணம் உள்ளது? என்பதுதான்.

வாழ்க்கையில் வெற்றியடைந்த ஒரு பெண் எதற்காக தனது 4 வயது குழந்தையைக் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மற்றொரு காரணம், இந்த கொலைக்கு திருமணத்திற்கு புறம்பான உறவோ, அல்லது தனது வாழ்க்கைக்கு குழந்தை ஒரு இடையூறாக பார்க்கப்படுவதோ இல்லை. பிரிந்த கணவருக்கு குழந்தையை காண்பிக்கக்கூடாது என்பதுதான் முக்கிய காரணமாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் கணவர் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளும் இவரால் வைக்கப்பட்டன. 

இந்நிலையில் பிரிந்த கணவருக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, குழந்தையைக் கொலை செய்ததாக தாய் சுசனா கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குழந்தையைப் பார்க்க அனுமதி கிடைத்ததால், தன் கணவர் குழந்தையுடன் பழகி, குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கணவர் வன்முறையாளர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு நிறைய கெட்ட பழக்கங்கங்களை அவர் கற்றுத் தருகிறார் எனக் குற்றம் சாட்டியிருந்த சுசனா, இப்படி குழந்தையைக் கொன்றிருப்பது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. 

கணவன் மீதான வெறுப்பு மற்றும் அவருடனான போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில், பெற்றெடுத்த குழந்தையைக் கொல்லும் வெறிச்செயலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

பெற்ற குழந்தையை ஒருவர் கொல்வதற்கான காரணங்களாக மனோவியல் நிபுனர்கள் பலவற்றைக் கூறுகிறார்கள். அதில் சில, உண்மையான அல்லது கற்பனையான காரணங்களுக்காக குழந்தையைக் கொல்பவர்கள், பகுத்தறிவற்ற சிந்தனையால் குழந்தையைக் கொல்பவர்கள், குழந்தையை இடையூறாகப் பார்ப்பவர்கள், எதிர்பாராத சிக்கல் அல்லது துன்புறுத்தலால் குழந்தையைக் கொல்பவர்கள் என விரியும் பட்டியலில் கடைசி வகையில் உள்ளார் சுசனா, 'தன் கணவன் அல்லது மனைவியைப் பழி வாங்குவதற்காக குழந்தையைக் கொலை செய்பவர்கள்'. 

வாழ்க்கையில் உயரங்களை எட்டிக்கொண்டிருந்த ஒரு பெண் இப்படி ஒரு சம்பவத்தை செய்திருப்பதுதான் நாட்டையே உலுக்கியுள்ளது. 

கோவாவில் தன் மகனுடன் சுசனா தங்கியிருந்த அறையில் ரத்தக்கறைகளைப் பார்த்த வேலையாட்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் சுசனாவைக் கைது செய்து விசாரித்தனர்.

அவர் கொண்டு சென்ற பையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அறையில் காணப்பட்ட ரத்தம் அவர் தற்கொலைக்கு முயன்றபோது வெளிப்பட்ட ரத்தமாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

குழந்தை மூச்சடைக்கப்பட்டு இறந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com