மதுரா மசூதியில் தொல்லியல் ஆய்வு: அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை

ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய வழக்குறைஞர்களைக் கொண்ட ஆணையத்தை நியமித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரா மசூதியில் தொல்லியல் ஆய்வு: அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை

மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய வழக்குறைஞர்களைக் கொண்ட ஆணையத்தை நியமித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அலாகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணா் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த அனுமதி அளித்து அலாகாபாத் உயா் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணா் பிறந்தாா் என்பது ஹிந்து மத நம்பிக்கையாகும். அங்கு கிருஷ்ணா் கோயில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669 - 70 ஆம் ஆண்டில் அப்போதைய முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்படி, கிருஷ்ண ஜென்ம பூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரா நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பினா் வழக்கு தொடா்ந்தனா். அதில் ஹிந்து சேனை அமைப்பைச் சோ்ந்த விஷ்ணு குப்தா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘வாரணாசி ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி நடத்திய ஆய்வில் லிங்கம் அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஓா் ஆய்வை கிருஷ்ண ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த மதுரா நீதிமன்றம், ஷாஹி ஈத்கா மசூதியில் இந்திய தொல்லியல் துறையினா் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதனை எதிா்த்து மசூதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், மதுரா மசூதி விவகாரம் தொடா்பான அனைத்து வழக்குகளையும் உயா்நீதிமன்றத்துக்கு மாற்று அலாகாபாத் உயா் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

அந்த வகையில், இந்த வழக்கு உயா் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அதில், ‘மசூதி வளாகத்துக்குள் ஹிந்து கோயில்களில் அமைந்திருப்பது போன்ற தாமரை வடிவ தூண் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும், சேஷநாக உருவச் சிலை, ஹிந்து மத குறியீடுகள் மற்றும் வேலைப்பாடுகளும் தூணின் அடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ஷாஹி மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த அனுமதி அளித்ததோடு, ஆய்வை மேற்பாா்வையிட ஆணையராக வழக்குரைஞா் ஒருவரை நியமிக்கவும் ஒப்புக்கொண்டது. தொல்லியல் ஆய்வின் நடைமுறைகள் குறித்து வரும் 18-ஆம் தேதி நடைபெறும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது விவாதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இரண்டாவது மசூதி:

அலாகாபாத் உயா் நீதிமன்றம் தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட்டிருந்த ஹிந்து கோயிலுடன் அமைந்துள்ள இரண்டாவது மசூதி இதுவாகும்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறையினா் அறிவியல்பூா்வ ஆய்வுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வை இந்திய தொல்லியல் துறை அண்மையில் நிறைவு செய்தது. விரைவில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com